கமல்ஹாசன் உருவப்படம் எரிப்பு: 30 பேர் கைது
கைது
கும்பகோணத்தில் கமலஹாசன் உருவப்படத்தை எரித்தது தொடர்பாக போராட்டம் நடத்திய 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
அமரன் படத்தில் போராடுபவர்களைப் பயங்கரவாதிகள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். அமரன் திரைப்படத்தில் காஷ்மீர் இளைஞர்களையும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கண்டித்தும், அப்படத்தைத் தயாரித்த நடிகர் கமல்ஹாசன், அதில் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் உருவப்படங்களை எரித்து முழக்கங்கள் எழுப்பினர். இப்போராட்டத்துக்கு விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் தை.சேகர் தலைமை வகித்தார். இளஞ் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநிலத் துணை அமைப்பாளர் விஜயஆனந்த், மாநில மகளிரணி செயலர் வெண்ணிலா சேகர், மாவட்டத் துணைச் செயலர் ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 30 பேரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
Next Story