காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் திடீரென ராஜினாமா

காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் திடீரென ராஜினாமா

துணை வேந்தர்

காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கிருஷ்ணனின் 3 ஆண்டு பணி காலம் முடியும் முன்பே, அவர் திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக தேர்வாகி, பணி அமர்த்தப்பட்டார்.

இவருக்குப் பதிலாக காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜெ. குமார், கடந்த 2022 மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பிறகு நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி பல்கலைக்கழக அலுவலர்களுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை மறுநிர்ணயம் செய்தல் போன்ற பல்வேறு சர்ச்சைகளும் அடுத்தடுத்து எழுந்தன.

மேலும் நிதி நெருக்கடியால் ஒவ்வொரு மாதமும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சில மாதமாகவே பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஓய்வூதியர்கள், அலுவலர்கள் போராட்டம் நடத்தியே சம்பளம் பெறும் சூழலும் உருவானது. தமிழக அரசின் உயர் கல்வித்துறையில் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் நெருங்கி அணுகி நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதிலும் சிக்கல் இருந்தது. இதற்கிடையில் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு உடல்நிலை பாதித்து, சமீபத்தில் அவருக்கு அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது.

இதற்கிடையே, பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி மற்றும் உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் துணைவேந்தர் ஜெ.குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார். அவருக்கு இன்னும் 11 மாதம் பணிக்காலம் இருக்கும் நிலையில், ஓரிரு நாளுக்கு முன்பு அவர் தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்துள்ளார். ஆளுநரிடம் இருந்து வரும் பதிலுக்காக அவர் காத்திருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tags

Next Story