வேலூர் பேட்டை மாரியம்மன் கோயிலில் கம்பம் நடுவிழா
வேலூர் பேட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கம்பம் நடுவிழாவுடன் நேற்று இரவு தொடங்கியது.
பரமத்தி வேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் திருவிழா 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு பூச்சாசாட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. விழாவை தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) இரவு புஷ்ப வியாபாரி சங்கம் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இன்று வியாழக்கிழமை இரவு அம்மன் யானை வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், இரவு காமதேனு வாகனத்தில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27- ஆம் தேதி மற்றும் 28-ஆம் தேதி இரவு அம்மன் அன்னவாகனம் மற்றும் சர்ப வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 29-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
30-ஆம் தேதி மாலை தீமிதி விழாவும், இரவு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 1-ஆம் தேதி காலை பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற அழகு போடுதல் மற்றும் அக்கினி சட்டி எடுத்தாலும், மாலை பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெறுகிறது.
2- ஆம் தேதி தேதி காலை கம்பம் காவிரி ஆற்றுக்கு செலுதலும், இரவு அம்மன் சப்பாரத்தில் திருவீதி உலா வருதலும், 3- ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர், பேட்டை புது மாரியம்மன் கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.