காமாட்சி அம்மனை வரவேற்ற பெரிய காஞ்சிபுரம் தர்கா நிர்வாகிகள்

காமாட்சி அம்பாள் லட்சுமி சரஸ்வதியுடன் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் மாசி மாத பிரம்மோற்சவம் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் காமாட்சி அம்பாள் லட்சுமி சரஸ்வதியுடன் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வருவது வழக்கம். இதன் நிறைவு விழாவில் தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில் புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கடந்த 40 ஆண்டுகளாக நின்று போயிருந்த இந்த பூப்பல்லக்கு நிகழ்ச்சி கடந்த 2022 ஆண்டு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சங்கத் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் கோரிக்கையின் பேரில் மீண்டும் புஷ்ப பல்லக்கு விழா தொடங்கியது. இந்த 2024ஆம் ஆண்டின் பிரம்மோற்சவம் கடந்த 15 தினங்களுக்கு முன்பு நடைபெற்று. இறுதியாக இந்த பூப்பல்லக்கு விழா நேற்று மாலை நடைபெற்றது. காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டபின் பச்சை பட்டு உடுத்தி லட்சுமி , சரஸ்வதி உடன் பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்தார். காஞ்சி சங்கர மடம் அருகில் உள்ள அஸ்ரத் சயது ஹமீது அவுலியா தர்கா அமைந்துள்ளது. இதை சார்ந்த நிர்வாகிகள் கடந்த காலங்களில் நிகழ்ந்த மத நல்லிணக்கத்தின் அடிப்படையில், இந்த ஆண்டும் தர்காவில் இருந்து பன்னீர் ரோஜா பூக்கள் மற்றும் வாசனை திரவியமான பன்னீருடன் காமாட்சி அம்பாளை தர்கா தர்மகர்த்தா முகம்மது இம்தியாஸ் அறிவுரையின் பேரில் அமித் சையத் உசேன் உள்ளிட்ட பரம்பரை குடும்பத்தார்கள் மற்றும் அச்சமயத்தினர் வரவேற்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர். இதேபோல் காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் பிரம்மோற்சவ விழாவில், ரதஉற்சவம் அன்று அதே பகுதியில் உள்ள கல் மண்டபத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாளுக்கு படையலிடும் நைவேத்யம் முதல் மரியாதையாக தர்கா நிர்வாகிகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் பிரச்னைகளில் மத நல்லிணக்கத்திற்கு முதல் உதாரணமாக காஞ்சிபுரம் திருக்கோவிலின் உற்சவங்கள் திகழ்கின்றன என உலகிற்கு கூறலாம்.

Tags

Next Story