காஞ்சிபுரம் : வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவம்

காஞ்சிபுரம் :  வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவம்

வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவ விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டுதோறும் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள களக்காட்டூரில் எழுந்தருளும் வனபோஜன உற்சவம் தை மாதத்தில் நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான வனபோஜன உற்சவம் விமரிசையாக நடந்தது. உற்சவத்தை ஒட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில், மேனால் பல்லக்கில் எழுந்தருளினார். கோவிலில் இருந்து புறப்பாடாகி, களக்காட்டூர் கிராமத்தில் முக்கிய வீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உற்வசவத்தையொட்டி சுவாமியை வரவேற்கும் விதமாக, களக்காட்டூரில் வீடுதோறும் வாசலில் வண்ணமயமான கோலமிடப்பட்டு, வீதிகளில் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து, களக்காட்டூரில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பாடாகி ஓரிக்கை மஹா பெரியவா மணிமண்டபம் வழியாக பாலாற்றங்கரையில் அமைக்கப்பட்ட பந்தலிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளினார். மாலை 4:30 மணிக்கு பாலாற்றங்கரையில் இருந்து புறப்பட்டு, சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் தெரு சென்றார். அங்கு சுவாமிக்கு மண்டகப்படி நடந்தது. இரவு 7:00 மணிக்கு சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீரங்க ராஜவீதி தேசிகர் சன்னிதியில் எழுந்தருளினார். தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு அங்கிருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் புறப்பாடாகி, திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.

Tags

Next Story