ரூ 65 ஆயிரத்திற்கு விலை போன மயிலை பசு மாடு
காங்கேயம் காளை
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடியூர் அருகே உள்ள பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும் கம்பீரத்திற்கும் உலகப் புகழ்பெற்ற காங்கேயம் இன காளைகள் கன்றுகள், பசு மாடுகள், விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இந்த சந்தையில் காங்கேயம் இன பசு மாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும் வாங்குவதும் நடைபெறும். இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்பவர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இந்த காங்கேயம் இன கால்நடை விற்பனைச் சந்தையில் காங்கேயம் பசு மாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வத்துடன் நேரில் கலந்து கொண்டனர்.
இதனால் இந்தச் சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மொத்தம் 52 காங்கேயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 25 பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது. இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன கிடாரி கன்று உடன் மயிலை பசுமாடு ரூ.65,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கேயம் இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.43,000 முதல் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ 10 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள் கன்றுகள் மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.