காங்கேயம் : மழையால் தேங்காய் பருப்பு உற்பத்தி பாதிப்பு
தேங்காய் உலர் களங்கள் மழையால் பாதிப்பு
கடந்த மூன்று மாதங்களாக கோடைகால வெய்யில் வாட்டி வந்த நிலையில் தற்போது ஒரு வார காலமாக இதமான மழை தொடங்கியுள்ளது. இதனால் காங்கேயத்தில் தேங்காய் பருப்பு வரத்து குறைவாகவும், தேங்காய் பருப்புகள் உலர் களங்களும், தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் வெகுவாக பாதித்துள்ளது. காங்கேயம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் கிட்டத்தட்ட 180 எண்ணெய் உற்பத்தி ஆலைகளும், 800க்கும் மேற்பட்ட தேங்காய் பருப்பு உடைக்கும் உலர் களங்களும் இயங்கி வருகிறது.
இந்த ஆலைகளில் சுமார் 30 ஆயிரம் வரை உள்ளூர் மற்றும் வெளியூர் குடும்பங்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். தற்போது கோடைக்கால மழை பெய்ய தொடங்கிய நிலையில் வெய்யில் தாக்கம் குறைவாகவும் காற்றில் ஈரப்பதம் நிறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் பருப்பு உடைப்பு களங்களில் பணிகள் மந்த நிலையை அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 800 தேங்காய் பருப்பு உடைக்கும் களங்களில் 100 களங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழையின் காரணமாக தேங்காய் பருப்பு உடைக்கப்பட்டு வெய்யிலில் காயவைத்த நிலையில் தற்போது மழைநீரில் நனையாமலிருக்க பிளாஸ்டிக் மற்றும் தார்ப்பாய் கவர்களால் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கேயத்தில் பருவநிலை மாறும் வரை இந்த நிலை நீடிக்கும் எனவும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.