மாடு திருடனை சிசிடிவி உதவியுடன் பிடித்த காங்கேயம் காவல்துறை

காங்கேயம் அருகே மாடு திருடனை சிசிடிவி வீடியோவை வைத்து பிடித்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வீரணம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள ஒரு சிந்து மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டி ஆகியவை கடந்த மாதம் ஏப்ரல் 26ஆம் தேதி காணவில்லை என மாட்டின் உரிமையாளர் அருண் பிரசாத் (27) காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் . புகாரை தொடர்ந்து போலிசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாடுகளை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் தொடர்ச்சியாக மாடு கட்டிவைக்கப் பட்டிருந்த பகுதிகளிலும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் அதில் பதிவான வாகன குறித்தும் விசாரணை செய்தனர்.

இந்நிலையில் இரண்டு மாடுகளையும் திருடி சென்ற திருடனை காங்கேயம் போலிசார் தேடி பிடித்துள்ளனர். இதனை அடுத்து போலிசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட திருடன் பெயர் சந்தோஷ்குமார் வயது 32 என்பதும் கரூர் மாவட்டம் வைகை நல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது‌. இதனை அடுத்து காங்கேயம் போலிசார் சந்தோஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story