கண்ணபுரம் மாட்டுச்சந்தை  தொடக்கம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை தொடங்கியது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கண்ணபுரத்தில் சுமார் 1000ஆண்டுகள் பழமை வாய்ந்த காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேகமாக சந்தை நடைபெறும். இந்த சந்தையில் மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும் விவசாயிகளும் வியாபாரிகளும் வந்த வண்ணம் உள்ளனர். காங்கேயம் அருகே கண்ணபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் விக்கிரம சோளீஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும்.

திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத அமாவாசையில் துவங்கி சித்திரை மாதம் பௌர்ணமி வரை உலகப் புகழ்பெற்ற காங்கேயம் இன மாடுகளுக்கான கண்ணபுரம் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டு மாட்டுச்சந்தை நேற்று முன்தினம் துவங்கியது. ஆனால் இந்த ஆண்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது இந்த ஆண்டு 8 நாட்கள் மட்டுமே நடைபெறுகின்றது.

சந்தையில் காங்கேயம் இன மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், எருதுகள்,கன்றுகள் என ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை கொண்டு வந்துள்ளனர். அதே போல் திருச்சி, மதுரை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களிலும் வாங்குவதற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வந்த வண்ணம் உள்ளனர்.

காங்கேயம் இன மாடுகள் உலகப் புகழ் பெற்றவை குறைவான உணவை உட்கொண்டு, கடினமாக உழைக்கக் கூடியது. அழகான கொம்புகளையும் பெரிய திமிளையும், வலிமையான உடல் அமைப்பையும், கம்பீரமான தோற்றத்தையும் கொண்ட காங்கேயம் இன காளைகள் இந்த பகுதி மண்ணின் சிறப்பு அடையாளமாகும். சத்தான பால் தரும் காங்கேயம் இன பசுக்கள் இன்றளவு இந்த பகுதியில் திருமணம் முடித்து கணவர் வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு தாய் வீட்டின் சீதனமாக கால காலமாக வழங்கப்பட்டு வருவது இதன் கூடுதல் சிறப்பு. அலங்காநல்லூர், பாலமேடு போன்ற உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுகளின் கதாநாயகனாக திகழ்வது காங்கேயம் இன காளைகள் தான்.

ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் தமிழக முழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்று வருவதால் காங்கேயம் காளைகளுக்கு கடும் கிராக்கி நிலவி வருகின்றது. மேலும் சத்தான பால் பற்றிய விழிப்புணர்வு தற்போது பொது மக்கள் இடையே அதிகரித்து வருவதால் நாட்டு மாடுகள் வாங்குவதிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாட்டுச் சந்தையில் மாடுகளுக்கு பயன்படுத்தப்படும் மணிகள், அழகான கயிறுகள், சலங்கைகள், தமிழக கட்சிகளின் கொடி கலரில் சாட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சந்தைக்கு வந்துள்ள மாடுகள் மற்றும் காளைகளை பார்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் என குடும்பத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர் இந்த சந்தையானது இன்னும் நான்கு தினங்கள் நடைபெற உள்ளதால் இன்னும் கூடுதலாக மாடுகள் வரத்து களைகட்ட துவங்கியது. மேலும் சில பள்ளிகள் கோடை விடுமுறை விட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் மாடுகளை பார்ப்பதற்கும் வந்தவண்ணம் உள்ளனர். கண்ணபுரம் மாட்டுச்சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகள் ,காளைகள்,கன்றுகள்,என ரகம் வாரியாக வந்துள்ளது.

Tags

Next Story