கண்ணபுரம் கோவில் தேரோட்டம் கோலாகலம்
வெள்ளகோவில் அருகே கண்ணபுரம் வித்தகச் செல்வி உடனமர் விக்ரம சோழீஸ்வரர் கோவில் வருடாந்திர தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 16ஆம் தேதி தேர் முகூர்த்தக்கால் போடப்பட்டது. அதற்கடுத்து கிராம சாந்தி புண்ணியாகம் அங்குரார்ப்பணம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 19ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் வித்தகச் செல்வி விக்ரம சோழீஸ்வரர் திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற்றது.
நேற்று திருத்தேருக்கு சாமி எழுந்தருதல் செய்யப்பட்டது. மாலை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கோவிலை வலம் வந்த தேர் நிலையில் சேர்க்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இரவு மங்கை வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.