குமரி மாவட்டத்தில்   அணைகளில் கலெக்டர்  ஆய்வு

குமரி மாவட்டத்தில்   அணைகளில்  கலெக்டர்  ஆய்வு
பேச்சிப்பாறை அணையை இன்று ஆய்வு செய்த கலெக்டர்
மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட கடலோரப்பகுதிகள், மலை அடிவார பகுதிகள், தாழ்வான பகுதிகள், ஆற்றுப்படுகைகள், நீரேற்றபகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் உட்புகாதவாறு தடுப்புகள், மணல் மூடைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலையோரப் பகுதிகள், மலைப்பகுதிகள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழமாலும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் உள்ள கழிவுநீர் ஓடைகளில் மழைநீர் தேங்காதவாறு தண்ணீர் செல்லும் வகையில் சுத்தம் செய்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின் படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி பேரிடர் மீட்பு மையத்தில் 31 மீட்புப்பணி வீரர்களும், கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட ஏழுதேசம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 30 மீட்புப்பணி வீரர்களும், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட ஆற்றூர் மரியா கல்லூரியில் 40 மீட்புப்பணி வீரர்கள் தயார்நிலையில் உள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இன்று திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பெருஞ்சாணி மற்றும் பேச்சிப்பாறை அணைகளின் நீர்மட்டத்தினை ஆய்வு செய்ததோடு, கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படின் அணையிலிருந்து வெள்ளநீர் மறுகால் திறந்து விட்டால் அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்றும், மதகுகள் நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, நீர்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.

நடைபெற்ற ஆய்வுகளில் திருவட்டார் வட்டாட்சியர் புரந்தரதாஸ், பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story