தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெறுவதையொட்டி அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி சட்டமன்றத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.
நடைபெற்ற ஆய்வில் கன்னியாகுமரி சட்டமன்ற உதவி தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் சாந்தி, தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், தனி வட்டாட்சியர் கண்ணன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.