பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ. விஜயதரணிக்கு எம்பி விஜய் வசந்த் கண்டனம்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி. உச்சநீதிமன்ற வழக்கறிஞரான விஜயதரணி குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், குமரிக்கு எந்த பரிசயமும் இல்லாதவர். இருப்பினும் காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவால் குமரி விளவங்கோட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வசந்தகுமார் எம்.பி. மறைந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜயதரணி போட்டியிட முயற்சித்தார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அன்று முதல் அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியாகி வந்தது. இந்த முறை கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று விஜயதரணி காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்துக்கே சீட் வழங்க அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதால் விஜயதரணி கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இதற்கிடையில் டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்த விஜயதரணி பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்து கட்சி தாவியதை தொடர்ந்து அவரை காங்கிரசில் இருந்து நீக்கி காங்கீரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய்குமார் உத்தரவிட்டுள்ளார். அவர் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரித்துள்ளனர்.
விஜயதரணியை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியுள்ளார். விஜயதரணி மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற ஊறுப்பினர் ஆக்கி அழகுபார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம் என்றும், மக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என விஜய்வசந்த் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.