குளம் போல் காட்சியளிக்கும் கன்னியாகுமரி கடற்கரை

குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் மழை கொட்டி வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அடியோடு குறைந்து விட்டது.
கடந்த 4 நாட்களாக மழை மற்றும் மேக மூட்டத்தினால் அதிகாலை வேளையில் சூரியன் உதயமாகும் காட்சியும், மாலை நேரங்களில் சூரியன் மறையும் காட்சியும் தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்படுகிறது. இந்த கடல் சீற்றத்தினாலும் தொடர் மழையினாலும் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இடையே படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் கனமழையின் காரணமாக கடற்கரை பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கன்னியாகுமரி கடற்கரையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகமும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
