கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்
நிர்வாகிகள் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட திமுக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திமுக மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில்,
தற்போது மத்தியில் நடந்து வரும் ஆட்சியால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது சர்வாதிகார போக்காகும். நமது தலைவர் மு க ஸ்டாலின் பேசும்போது இந்த தேர்தலை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறியுள்ளார். எனவே தேர்தல் பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
மொத்தத்தில் நமது எதிரி பாரதிய ஜனதா அதை மனதில் வைத்து தேர்தல் பணி ஆற்ற வேண்டும். நாங்குநேரியில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 50,000 பேர் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ் ராஜன், மகளிர் அணி மாநில செயலாளர்கள் ஹெலன் டேவிட்சன், வக்கீல் அணி மாநில துணைச் செயலாளர் தினேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.