கரந்தை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக அளவில் முதலிடம்
மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கேடயம் வழங்கி பாராட்டு
தமிழக அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில், புறநோயாளிகள் வருகை, உள்நோயாளிகள் அனுமதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, குழந்தைகளுக்கு நூறு விழுக்காடு தடுப்பூசி செலுத்துதல் என 19 தரவரிசை அடிப்படையில் மதிப்பீடு செய்து, தரவரிசை பட்டியலை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான மார்ச் மாத தரவரிசை முடிவுகள் சனிக்கிழமை சென்னையில் வெளியிடப்பட்டது. இதில், தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக அளவில் முதலிடத்தையும், சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 4 ஆவது இடத்தையும், கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் 7 ஆவது இடத்தையும், மகர்நோன்புச்சாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 12 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி சனிக்கிழமையன்று கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிமேகலையை நேரில் அழைத்து கேடயம் வழங்கி பாராட்டினார். மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி, சுகாதார அலுவலர் தங்கவேல், சுகாதார ஆய்வாளர் எபின் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது குறித்து மாநகர்நல அலுவலர் சுபாஷ்காந்தி கூறியதாவது; கரந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனையில், சுமார் 60 முதல் 70 கர்ப்பிணி தாய்மார்கள் வந்து ஆலோசனை பெறுகின்றனர். தாய்சேய் நல கண்காணிப்பு மையம், கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு மற்றும் யோகா வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 119 சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. 2023ஆம் ஆண்டு இம்மருத்துவமனைக்கு டெல்லி மருத்துவ குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேசிய தர உறுதிச்சான்று கிடைக்கப்பெற்று மூன்று லட்சம் பரிசுத்தொகையும் பெற்றுள்ளது" என்றார்.