ஊட்டி வந்தார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
ஊட்டி வந்த கர்நாடக முதல்வர்
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே கட்டமாக தேர்தல் முடிந்தது. அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதல் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தேர்தல் பரப்புரை முடிந்து 5 நாள் பயணமாக குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வந்து உள்ளார். இன்று மதியம் 1.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது குடும்பத்தினருடன் ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேட் மைதானத்திற்கு சுமார் 2.30 மணியளவில் வந்திறங்கினார். அவருடன் கர்நாடகா மின்சார துறை அமைச்சர் ஜார்ஜ், சமூக நலத்துறை அமைச்சர் மாதேவப்பா, எம்.எல்.சி. கோவிந்தராஜ் ஆகியோர் இருந்தனர்.
இதை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் கிளம்பி ஊட்டி கேவ்லாக் சாலையில் உள்ள தனியார் பங்களாவிற்கு சென்றார். வருகிற 11ம் தேதி வரை 5 நாட்கள் இங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். மேலும் ஒரு சில தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கர்நாடக முதலமைச்சர் வருகையையொட்டி கர்நாடகா மற்றும் நீலகிரி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.