திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா
முருகன்ப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் தீபத்திருவிழாயொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு வைர, தங்க ஆபரணங்கள், அணிவிக்கப்பட்டு முருகப்பெருமான் காட்சி தந்தார்.
காலை முதலே மலைக் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. சில மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை மலைக் கோயிலில் தீப தரிசனம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோயிலில் குவிந்தனர். மாலை 6 மணி அளவில் மாட வீதியில் வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தேவயானி தாயாருடன் எழுந்தருளினார். அப்போது திருக்கோயில் தலைமை அர்ச்சகர் சொக்கப்பானையில் தீபம் ஏற்றிய போது கோயிலுக்கு எதிரில் உள்ள பச்சரிசி மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மலைக் கோயிலுக்கு எதிரில் உள்ள பச்சரி மலையில் வாண வேடிக்கையுடன் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மகா நெய் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் தீப தரிசனம் செய்து தீபங்கள் ஏற்றிவைத்து முருகப்பெருமானை அரோகர முழக்கங்களுடன் தரிசனம் வழிபட்டனர். திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் பெண்கள் தீபம் ஏற்றிவைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.