கார்த்திகை 1 :மாலை அணிந்து விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை 1 :மாலை அணிந்து விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள்

மாலையிட்டு விரதத்தை துவக்கிய பக்தர்கள் 

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஆன்மிக பயணம் செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான அய்யப்ப பக்தர்களுக்கு குருவடியார் ஆர்.எஸ். மோகன் சுவாமி மாலை அணிவித்தார். கோவில் சன்னதி இன்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வல்லபை விநாயகர், அய்யப்பன், மஞ்சமாதா சன்னதிகளில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த கோவிலில் கார்த்திகை முதல் நாளிலிருந்து 48 நாட்களும் இரவு பஜனை, கூட்டுப்பிரார்த்தனை, அன்னதானம் நடைபெறும், முன்னதாக கோவிலில் மக்கள் நலமுடன் வாழ, மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்க மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர். இது குறித்து வல்லபை அய்யப்பன் கோவில் தலைமை குருக்கள் மோகன் சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது: கலியுக வரதன்,கண்கண்ட தெய்வம் அய்யப்பன் அருளால் விரதம் மேற்கொள்ளும் சாமிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. சபரி மலையில் உள்ள அய்யப்பன் ஆலயம் போல இந்த ஆலயமும் அமைந்துள்ளது ஆகவே இன்று கார்த்திகை முதல்நாளில் தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து கொள்வதற்காகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சபரிமலை செல்ல முடியாத சாமிமார்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தங்களின் இருமுடியை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் விழிப்புணர்விற்காக இருமுடிப்பையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை. புகையிலை பழக்கம் உள்ளவர்களும், 41 நாட்களுக்கு குறைவாக விரதம் இருப்பவர்களுக்கும் இருமுடி கட்டப்படுவதில்லை. சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story