கலைஞர் நூற்றாண்டு விழா: மாணவர்களுக்கு கருத்தரங்கு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கு நடக்கவுள்ளதாக விருதுநகர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், கருத்தரங்கங்கள் ஆகியன மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென தமிழ்நாடு முதலமைச்சரால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' என்ற குழு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள் கல்லூரிகளில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கினை நடத்துவதென இக்குழு தீர்மானித்துள்ளது. அந்த அடிப்படையில், இதற்கென குழுக்களும் பேரவைத் தலைர் களால் அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்றப் பேரவையின் முன்னாள் தலைவர் இரா.ஆவுடையப்பன் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உள்ளடங்கிய துணைக் குழுவானது, சட்டமன்றப் பேரவை உயர் அலுவலர்களுடன், விருதுநகர் மாவட்டத்தில் 2 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரியில் கருத்தரங்கினை வருகிற 10 ஆம் தேதி (புதன்கிழமை) நடை பெற உள்ளது. இக்கருத்தரங்கு 10-1-2024 (புதன்கிழமை) அன்று காலை 10-00 மணியளவில் விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நண்பகல் 12-00 மணியளவில், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பிற்பகல் 3-00 மணியளவில் விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
