கருணாநிதிக்கு சமூக நீதி பார்வை இருந்தது - பீட்டர் அல்போன்ஸ்

கருணாநிதிக்கு சமூக நீதி பார்வை இருந்தது - பீட்டர் அல்போன்ஸ்

 பீட்டர் அல்போன்ஸ் 

கலைஞர் கருணாநிதிக்கு சிறந்த கவிஞர், சிந்தனையாளர் போன்றவற்றை விட, சமூக நீதி என்ற மிகப் பெரிய பார்வை இருந்தது என தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, தஞ்சாவூர் தமிழிசை மன்றம், தஞ்சை தமிழ் அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நிறைவுப் பெருவிழாவில் அவர் மேலும் பேசியது: கருணாநிதி தான் வாழ்ந்த காலத்தில் ஏறக்குறைய 3.50 லட்சம் பக்கங்களை எழுதிக் குவித்தார். மிகப் பெரிய சிந்தனையாளரான அவர் மாபெரும் பேச்சாளராகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கை சொல்கிற பாடம் என்ன என்பதை தமிழக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது.

முதல்வராக இருந்த கருணாநிதி சிறந்த கதை ஆசிரியர், கவிஞர், இலக்கியச் சிந்தனையாளர் போன்றவற்றை விட அவருக்கு சமூக நீதி என்கிற மிகப் பெரிய பார்வை இருந்தது. தமிழக முதல்வராக 5 முறை பதவியேற்ற அவர் ஏறக்குறைய 60 ஆண்டுகள் சட்டப்பேரவையில் இருந்தார். எந்தத் திட்டத்தை திட்டமிட்டாலும், எந்தவொரு பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனை வந்தாலும் நாம் எடுக்கிற எந்த முயற்சியும் சமூக நீதிப் பார்வை இல்லாவிட்டால், அது ஓட்டைக் குடத்தில் ஊற்றிய நீராக இருக்கும் எனக் கூறினார் கருணாநிதி.

அதுதான் மற்ற அரசியல் தலைவர்களுக்கும், கருணாநிதிக்கும் உள்ள வேறுபாடு. தமிழகம் என்பது சமூக நீதி பார்வையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட அற்புதமான மாநிலம். இதற்கு கருணாநிதியின் பங்கு மகத்தானது என்பது யாராலும் மறுக்க முடியாது" என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

இவ்விழாவுக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் மு. இளமுருகன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் மக்களவை உறுப்பினர் கம்பம் பெ.செல்வேந்திரன், மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி ஆகியோர் பேசினர். சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி, கௌரா பதிப்பகக் குழுமத் தலைவர் கௌரா ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, முனைவர் இரா. குணசேகரன் வரவேற்றார். நிறைவாக, முனைவர் வி. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

Tags

Next Story