பெண்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி : சுப.வீ

சொத்துரிமை, உள்ளாட்சி பதவிகள் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி என சமூக நீதிக் கண்காணிப்புக் குழுத் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை, சென்னை மாநகர நூலக ஆணைக் குழு, சமூக நீதிக் கண்காணிப்புக் குழு ஆகியவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அவர் மேலும் பேசியது: ஒரு சமூகம் சமத்துவ நிலையை அடைவதற்கு மிகப் பெரிய அளவில் பாடுபட வேண்டியுள்ளது. பள்ளத்தில் கிடக்கும் ஊர்தியை மேல் நோக்கி நகர்த்துவதற்கு 10 பேர் தள்ள வேண்டும். அப்படித் தள்ளிவிட்ட முதல் மற்றும் குறிப்பிடத்தக்க கைதான் கருணாநிதியின் கை.

செங்கல்பட்டில் 1929 ஆம் ஆண்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தொடக்கப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் பணியமர்த்தல், காவல் துறையில் பெண்கள் இடம்பெறுதல், பெண்களுக்கும் சொத்துரிமை போன்ற கனவில் கூட நினைத்து பார்க்க முடியாதவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இதில், பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் குறித்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் 1951 ஆம் ஆண்டில் அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்தாலும், அச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், பயனற்றுக் கிடந்த அத்தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்கிற சட்டத்தை நிறைவேற்றினார் கருணாநிதி.

இதன் மூலம்தான் பெண்களுக்கு சொத்துரிமை இருக்கிறது. இதேபோல, 1996 ஆம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் கருணாநிதிதான். இந்த இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டாலும், பெரும்பாலும் அப்பெண்களின் கணவரிடம்தான் அதிகாரமும், உரிமையும் உள்ளன. எனவே, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தொடர்ச்சி தேவைப்படுகிறது. பெண்களுக்குரிய அதிகாரத்தை ஆண்கள் வைத்திருப்பதையும் உடைத்தெறியும் நிலை ஏற்பட்டால்தான் கருணாநிதியின் நூற்றாண்டுக்கு பெருமை சேரும். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் திறக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள், கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் பன்மடங்காகப் பெருகின என்கிற உண்மையை யாரும் சொல்வதில்லை.

கருணாநிதி காலத்தில் பல்கலைக்கழகங்கள் பல திறக்கப்பட்டன. கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலும், பல்வேறு பணிகளுக்கு இடையிலும் நூல்கள் படிக்கும் பழக்கத்தையும் வைத்திருந்தார். அதனால், நாள்தோறும் 4 மணிநேரம் மட்டுமே உறங்கினார். எனவே, நம்முடைய படிப்பும், உழைப்பும் நேரம் சார்ந்தது அல்ல; ஆர்வத்தைப் பொருத்தது. எனவே, மாணவர்கள் நிறைய படித்து, சாதிக்க வேண்டும்" என்றார் சுப.வீரபாண்டியன். இந்த விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினர் செயலர் த.ஆபிரகாம், உறுப்பினர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், முனைவர் ஆர்.ராஜேந்திரன், மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story