திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து எந்த மாற்றமும் இல்லை - பாஜக வேட்பாளர்
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்நாதன். இவர் நேற்று கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாளையம் கடைவீதி பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது, குஜிலியம்பாறை ஒன்றிய தலைவர் சரவணன், பொதுச் செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் அசோகன் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடையே பேசிய வேட்பாளர் செந்தில்நாதன், திமுக, அதிமுக கட்சியில் இதுவரை யார் பிரதமர் என குறிப்பிடவில்லை. இனியும் அவர்களால் பிரதமர் யார் என்று கூற முடியாது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இந்த முறை போடும் போட்டு எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார் என கருத்துக் கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அப்போது கரூர் நாடாளுமன்ற தொகுதியும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால், இதுவரை மாறி மாறி வெற்றி பெற்ற திராவிட கட்சிகளால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற இயலவில்லை. திராவிட கட்சிகள் நிறைவேற்றாத திட்டங்களை பாரதிய ஜனதா கட்சி நிறைவேற்றி தர பாடுபடும் என தெரிவித்தார். மேலும், ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் தொகுதிக்கு மீண்டும் திரும்பி வரவே இல்லை.எனவே, எனது செல்போன் எண்ணை குறித்து கொள்ளுங்கள். எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். உங்கள் பிரச்சினையை தீர்க்க நான் முன் வருவேன் என தெரிவித்தார்.