கரூரில் ஆபத்தான நிலையில் காவிரி ஆற்று பாலம்? மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு..!
ஆபத்தான நிலையில் உள்ள காவிரி ஆற்றுப் பாலம்
கரூர்- நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ளது காவிரி ஆற்று பாலம். இப்பகுதியில் போக்குவரத்துக்காக இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. புகலூர் அருகே கதவணை கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் கதவணையில் தண்ணீர் தேக்கினால் இந்த பாலத்தின் அடியில் எப்போதும் தண்ணீர் நிற்கும். இந்த சூழலில் இந்த பாலத்தின் அருகாமையிலேயே மணல் குவாரி அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதால் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் இயற்கை ஆர்வலர்களும் மணல் குவாரி அப்பகுதியில் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, அதிகப்படியாக அள்ளப்பட்ட மணலால், தற்போது பாலத்தின் அடிப்பகுதி வலுவிழந்த நிலையில் உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி கொடுத்தால் நிச்சயம் பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக கருதி, சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்ட எல்லையான நஞ்சை புகழூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இரண்டு பாலங்களும் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இனியும் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமேயானால் இந்த இரண்டு பாலங்களும் வலுவிழந்து இடிந்துவிழும்நிலை ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாலங்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.