கருங்கல் அருகே கேரள இறைச்சி கழிவு லாரி சிறைப்பிடிப்பு

கருங்கல் அருகே கேரள இறைச்சி கழிவு லாரி சிறைப்பிடிப்பு

சிறைபிடிக்கப்பட்ட லாரி

கருங்கல் அருகே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த டெம்போவை சிறைபிடித்த பொதுமக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் இருந்து கருங்கல் நோக்கி கேரள பதிவெண் கொண்ட கூண்டுகட்டிய டெம்போ ஒன்று துர்நாற்றத்துடன் வந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த இளைஞர்கள் அந்த வாகனத்தை நிறுத்த முயன்றனர்.

ஆனால் டிரைவர் நிறுத்தாமல் வாகனத்தை வேகமாக எடுத்துச்சென்று விட்டார். உடனே அப்பகுதி இளைஞர்கள் துரத்திச் சென்று கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியில் வைத்து அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் அங்கு வந்த கிள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர் சத்தியராஜ் தலைமையில் திரண்ட பொது மக்கள் அந்த வாகனத்தை அங்கிருந்து எடுத்து செல்லாத வகையில் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர்.

மேலும் டெம்போ டிரைவரிடம்வாகனத்தில் என்ன இருக்கிறது என்று கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். மீண்டும் கேட்டபோது இறைச்சிக் கழிவுகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கூடங்குளம் பகுதிக்கு ஏற்றி செல்வதாக தெரிவித்தார்.இதனை அடுத்து கிள்ளியூர் பேரூராட்சி சார்பில் இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்தியதை அடுத்து அந்த வாகனத்தை கருங்கல் போலீசில் ஒப்படைத்தனர். கருங்கல் போலீசார் வாகனத்தை கருங்கல் காவல் நிலையம் கொண்டு வந்து நிறுத்தினர்.

அங்கு துர்நாற்றம் வீசியதையடுத்து டெம்போவை குறும்பனை சாலையில் காட்டுக்கடை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கொண்டு வந்து நிறுத்தினர்.ஆனால் அங்கு நிறுத்த பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாகனத்தை எடுத்து செல்லும்படி டிரைவரிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து டிரைவர் டெம்போவை ஓட்டி சென்றார்.

Tags

Next Story