திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தல்

கைது
சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்கள் நாகஜோதி, தினேஷ் தம்பதிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. நாகஜோதிக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் அனுராதா என்பவர், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த லோகாம்பாள் என்பவருக்கு தகவல் கொடுத்து அவர் மூலம் இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசி குழந்தையை விற்க வற்புறுத்தி உள்ளனர்.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி இமயவரம்பன் மற்றும் நகர போலீசார் மருத்துவர் அனுராதா மற்றும் குழந்தைகள் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்று இருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆள் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து தொடர் விசாரணை நடந்துவரும் நிலையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் உள்ளதாகவும் அவர்களையும் விரைவில் கைது செய்வோம் என டி.எஸ்.பி இமயவரம்பன் தெரிவித்தார்.
