திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  வெற்றி

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை 

திண்டுக்கல் மாவட்டம் உல்லியங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய வாலிபருக்கு காலில் வீக்கம் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தது. இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் . அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவருக்கு ரத்தத்தை சுத்திகரிக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். மகன் மீது கொண்டுள்ள அளவு கடந்த பாசத்தினால் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளிக்க அந்த வாலிபரின் தாய் முன் வந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது ஒரு சிறுநீரகம் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டு மகனுக்கு பொருத்தப்பட்டது. அரசு மருத்துவமனை டீன் நேரு வழிகாட்டுதலின்படி, சிறுநீரக மருத்துவ குழுவைச் சேர்ந்த நூர்முகமது, கந்தசாமி, பிரகாஷ், மைவிழிசெல்வி, சிறுநீரக அறுவை சிகிச்சை குழு மருத்துவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், ரவி, பிரபாகரன், ராஜேஷ், பரணி, சந்தோஷ்குமார், மற்றும் மயக்கவியல் மருத்துவ குழு சந்திரன், பாலசுப்ரமணிய குகன், ராஜராஜன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து முடித்தனர். தற்போது தாயும், மகனும் நலமுடன் உள்ளனர். அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 20 வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறுவை சிகிச்சையின்போது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய ஒருங்கிணைப்பாளர் மாரிசெல்வம் உடனிருந்தார்.

Tags

Next Story