நாமக்கல் தொகுதி வேட்பாளர்களின் கனிவான கவனத்திற்கு
வேட்பாளர்கள்
நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை உள்ளிட்ட நாமக்கல் மாவட்டத்திற்கு தேவையான, ரயில்வே சம்பந்தமான முக்கிய கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு சுமார் 13 நாட்கள் மட்டுமே உள்ளன. நாமக்கல் தொகுதி முழுவதும் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கும் வேட்பாளர்கள்,
நாமக்கல் பகுதி மக்களின் ரயில்வே சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை எந்த வேட்பாளரும் முன்னெடுக்கவில்லை. நாமக்கல்லை டெல்டா மாவட்டங்களுடன் இணைக்கும் வகையில் நாமக்கல் - அரியலூர் (வழி: துறையூர்,பெரம்பலூர்) புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இது சம்மந்தமாக தென்னக ரயில்வே ஒரு சர்வே நடத்தி அப்படியே கிடப்பில் போட்டுள்ளது. நாமக்கல்லை மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கும் வகையிலும்,
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமான திருச்செங்கோடுக்கும் ரயில் வசதி ஏற்படுத்தும் வகையிலும், நாமக்கல் - ஈரோடு (வழி:திருச்செங்கோடு) புதிய ரயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டி எண். 20601/2 சென்னை - போடி - சென்னை ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டி எண். 22153/4 சென்னை - சேலம் - சென்னை ரயில் நாமக்கல் வழியாக கரூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். வண்டி எண். 16087/8 அரக்கோணம் - சேலம் - அரக்கோணம் ரயில் நாமக்கல் வழியாக கரூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். ஈ
ரோடு வழியாக சுற்றிச்செல்லும் பல ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டி எண். 06800/1 கோவை - ஈரோடு - கோவை ரயிலை சேலம் அல்லது கரூர் வழியாக நாமக்கல் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் மோகனூர் ரயில்நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரயில்வேத்துறை மூலம் செய்யவேண்டிய இதுபோன்ற பல முக்கிய கோரிக்கைகள் இருந்தும் அதை தேர்தல் அறிக்கையிலோ அல்லது வாக்குறுதியிலோ எந்த கட்சியின் வேட்பாளர்களும்,
வெளிப்படுத்தவில்லை. எனவே இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் உறுதிமொழி கூற வேண்டும் என்பதே நாமக்கல் மாவட்ட பொதுமக்களின் தலையாய கோரிக்கையாக உள்ளது.