கிசான் திட்ட பயனாளிகளில் தவணைத்தொகை பெற தகவல்களை பதியணும் !
பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகளில் 16வது தவணைத் தொகையை பெற KYC தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்.கிஸான் திட்ட பயனாளிகள் எதிர்வரும் தவணைத் தொகையினை பெறுவதற்கு EKYC செய்வது அவசியம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசின் பி.எம்.கிஸான் திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய் ஆறாயிரம் ஊக்கத்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூபாய் இரண்டாயிரம் வீதம் மூன்று தவணைகளாக தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 50,963 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களில் 1811 நபர்கள் e-KYC செய்ய வேண்டியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக விருதுநகர் - 143, இராஜபாளையம் - 111, திருவில்லிபுத்தூர் - 60, வத்திராயிருப்பு - 313, சாத்தூர் - 50, சிவகாசி - 134, வெம்பக்கோட்டை - 262, காரியாபட்டி - 305, திருச்சுழி - 246 மற்றும் அருப்புக்கோட்டை - 187 ஆக மொத்தம் - 1811 விவசாயிகள் e-KYC செய்ய வேண்டியுள்ளது. இது குறித்த தகவல்களை பெறுவதற்கு தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிஸான் போர்டலில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து OTP மூலம் e-KYC செய்யலாம். பொது சேவை மையங்களை அணுகி பயோமெட்ரிக் முறையிலும் மற்றும் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகி EKYC செய்யலாம். மேலும், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி மத்திய அரசு வெளியிட்டுள்ள பி.எம்.கிஸான் செயலி மூலமும் EKYC செய்யலாம்.
இத்திட்டத்தில் தவணை தொகையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கே விடுவிக்கப்படுவதால் இதுவரை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்து பயன்பெறுமாறு வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்கள்.