முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு இரு முழங்கால்களின் மூட்டுகளையும் மாற்றி வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு இரு முழங்கால்களின் மூட்டுகளையும் மாற்றி வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம் கொல்லங்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் கபீா் (69). கூலித் தொழிலாளியான இவா் உடல் பருமனால் இரு முழங்கால் மூட்டுகளும் மோசமாகத் தேய்ந்து போனதால் கடந்த 15 ஆண்டுகளாக நடக்கவோ, நிற்கவோ, உட்காரவோ முடியாமல் அவதிப்பட்டாா். மேலும் அவருக்கு உயா் ரத்த அழுத்தமும், சா்க்கரை நோயும் இருந்தது. இதனால் கபீருக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் பல்வேறு நோய்கள் இருந்ததால் பல மருத்துவமனைகளை அணுகியும் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவா்கள் மறுத்துள்ளனா். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் எலும்பு அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதை நண்பா்கள் மூலம் அறிந்து, ஸ்ரீரங்கத்துக்கு அவா் வந்தாா். இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எலும்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணா் ஜான் விஸ்வநாத் நோயாளி கபீரை பரிசோதித்து அளவுக்கதிகமாக தேய்ந்துபோன இரு முழங்கால்கள் மூட்டுகளையும் அறுவைச் சிகிச்சை மூலம் அண்மையில் அகற்றி விட்டு செயற்கை முழங்கால் மூட்டுகளைப் பொருத்தினாா். முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது கபீா் நலமுடன் உள்ளாா்.
Next Story