ஓடும் ரயிலில் கத்திமுனையில் கொள்ளை; 4 பேர் படுகாயம்
நேற்றிரவு கும்மிடிப்பூண்டி சென்ற மின்சார ரயிலில், பயணிகளிடம் மர்மநபர்கள் கத்தி காட்டி மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்தனர்; அதில், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10:45 மணிக்கு, கும்மிடிப்பூண்டி நோக்கி புறநகர் மின்சார ரயில் சென்றது. கவரைப்பேட்டையை கடந்து கும்மிடிப்பூண்டி நிலையம் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இளையராகவன், 21, உத்திராபதி, 27, கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் கிராமத்தைச் சேர்ந்த சரத், 26, சுண்ணாம்புகுளம் கிராமத்தைச் சேர்ந்த மவுலீஸ்வரன், 24, ஆகிய நான்கு பேர், ஒரே பெட்டியில் பயணித்தனர்.
அந்த பெட்டியில், கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க மூன்று மர்ம நபர்கள் ஏறினர். திடீரென அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பயணியர் நான்கு பேரையும் மிரட்டி அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் மொபைல் போன்களை பறித்தனர். அப்போது எதிர்ப்பு காட்டியதால் பயணியர் நான்கு பேரையும் கத்தியால் தாக்கினர். கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலம் அருகே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, கொள்ளையர் மூவரும் இறங்கி, தப்பி சென்றனர்.
தலை மற்றும் கைகளில் காயமடைந்த பயணியர் நான்கு பேரும், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருவருக்கு தலை மற்றும் கையில் தையல் போடப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஓடும் ரயிலில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளையடித்தது, பயணியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.