"தஞ்சாவூரை அறிவோம்" சிறப்பு பயிற்சி முகாம் தொடக்கம்

தஞ்சாவூரை அறிவோம் சிறப்பு பயிற்சி முகாம் தொடக்கம்

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் தஞ்சாவூரை அறிவோம் என்கிற சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கியது.


தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் தஞ்சாவூரை அறிவோம் என்கிற சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கியது.

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், மாவட்டத்தின் சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், "தஞ்சாவூரை அறிவோம்" என்கிற சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இந்த முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பேசியது: தஞ்சாவூர் மாவட்டம் நெற்களஞ்சியம் மட்டுமல்லாமல், பல்வேறு கலைகளின் பெட்டகமாகவும், சோழர் காலம் முதல் தொன்மையான வரலாற்றை கொண்ட நகரமாகவும், தமிழகத்தின் தலைசிறந்த மாவட்டமாகவும், உலகுக்கு பண்பாட்டையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் மாவட்டமாகவும் திகழ்கிறது. இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் தஞ்சாவூர் மாவட்டத்தின் அனைத்து சிறப்புகளையும் தெரிந்து கொண்டு அதை போற்றிப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்" என்றார் ஆட்சியர். இந்த முகாம் தொடர்ந்து, மே 24 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. இதில், 50 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த முகாமில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைக்குரிய நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கைவினைக் கலைப் பொருட்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், விவசாயம், உணவு வகைகள், நிகழ்த்து கலைகள் ஆகியவை குறித்து அந்தந்த துறையில் தலைசிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சியும், களப்பயணம் மேற்கொண்டு நேரடி விளக்கமும் அளிக்கப்படுகிறது என தஞ்சாவூர் மாவட்டச் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துக்குமார் தெரிவித்தார். தொடக்க நாளான சனிக்கிழமை தஞ்சாவூர் அருங்காட்சியகம், உணவு அருங்காட்சியகம், சரசுவதி மகால் நூலக அருங்காட்சியகம், அரண்மனையிலுள்ள சரபோஜி அருங்காட்சியகம் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இவர்களுக்கு ஓலைச்சுவடி காப்பாளர் பி.பெருமாள் விளக்கம் அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி முகாமை திட்ட இயக்குநர் பால கணேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story