கொடைக்கானல் : ஜீப்பில் ஆபத்தான பயணம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜீப் வாகனத்தின் மேற்கூரையிலும்,முன் பகுதியிலும் அமர்ந்தவாறு மக்கள் பயணம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை, அடிசரை, பெருங்காடு, உள்ளிட்ட மலைக்கிராமங்கள் அமைந்துள்ளது, இந்த மலைக்கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இங்கு முக்கிய தொழிலாக விவசாயம் மட்டும் செய்யப்படுகிறது, இந்நிலையில் சாலை வசதிகள் இருந்தும் அதிக வளைவுகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட சாலை என்பதால் இந்த கிராமங்களுக்கு செல்ல கூடிய நுழைவாயில் கிராமமான பள்ளங்கி கிராமம் வரை மட்டுமே பொது போக்குவரத்திற்காக பேருந்து சேவை இயக்கப்படுகிறது.
மேலும் கடந்த பல ஆண்டாக பள்ளங்கியில் இருந்து சுமார் 08 கிலோ மீட்டர் தூரம் உள்ள கோம்பை, அடிசரை உள்ளிட்ட மலைக்கிராமப்பகுதிகளுக்கு பேருந்து சேவை தற்போது வரை துவக்கப்படவில்லை, இதனை தொடர்ந்து இந்தப்பகுதியில் வசிக்கும் மலைக்கிராமத்தினர், தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கும் அவசர தேவைகளுக்கு வெளியில் செல்லவும் சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் தங்களது சொந்த வாகனங்களையும், சொந்த வாகனம் இல்லாதோர் பொருட்கள் ஏற்றிச் செல்லும் ஜீப் வாகனங்களையும் தங்களது பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர், மேலும் தற்போது சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களில் அதிகப்படியான எண்ணிக்கையில் வாகனங்களின் மேற்கூரையிலும்,முன் பகுதியிலும் ஆபத்தான முறையில் இப்பகுதியினர் அமர்ந்து பயணிப்பது அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக வாகன மேற் கூரையில் அமர்ந்து செல்லும் போது, சாலையின் குறுக்கே உள்ள மின் கம்பிகளில் உரசி விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது, அதே போல வளைவு நெளிவு கொண்ட மலை சாலையின் குறுக்கே கால்நடைகள் வருவது, மற்ற வாகனங்கள் குறுக்கிடுவது உள்ளிட்ட நேரங்களில், திடீரென பிரேக் பிடிக்கும் போது, வாகனத்தில் அமர்ந்திருப்போர், சாலையில் விழுந்து விபத்தில் சிக்கக்கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது, இதனை கருத்தில் கொண்டு விபத்து ஏற்படும் முன், சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் செய்வோரை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தவும், இந்தப்பகுதி மக்களின் தேவையினை பூர்த்தி செய்ய பள்ளங்கி பகுதியில் இருந்து இந்த பகுதிகளுக்கு மினி பஸ் சேவை துவக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.