ரோஜா பூங்காவில் பட்டாம் பூச்சி போன்று வடிவமைப்பு
பட்டாம் பூச்சி வடிவமைப்பு
கொடைக்கானல் நகருக்கு கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்த நிலையில் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக வண்ணத்துப் பூச்சியின் உருவம் பல்வேறு மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 300 தொட்டிகளில் மேரி கோல்டு, டயான்தஸ்,பேன்சி, கேலண்டுல்லா, ஆன்ட்டிரைனம் ஆகிய பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பெரிதும் ரசித்து மகிழ்ந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
இதனிடையே இப்பூங்காவை நேற்று முன்தினம் 4596 பேர்களும் நேற்று 4,238 பயணிகளும் என சுமார் 8900 பயணிகள் கண்டு களித்துள்ளனர் என பூங்கா மேலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். அதேபோல பிரையன்ட் பூங்காவை நேற்று முன்தினம் 4230 பேரும் நேற்று மழையின் காரணமாக சுமார் 3067 பயணிகளும் கண்டு களித்துள்ளனர். இதனிடையே நேற்று மாலை சுமார் 5:30 மணி அளவில் கனமழை கொட்டத் துவங்கி சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் தொடர்ந்து பெய்தது.
இதனால் செண்பகனூர் பகுதியில் மரம் முறிந்து மின் வயர்கள் மீது விழுந்ததின் காரணமாக காரணமாக மூஞ்சிக்கல் மற்றும் அப்சர்வேட்டரி பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனை அடுத்து மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு பலத்த மழையிலும் அதனை அகற்றி மின்சாரம் வழங்கினர். மழையைத் தொடர்ந்து மாலையில் இதமான குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனுடைய வரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்