கொடைக்கானல் : வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டு தீ
தீயை அணைக்கும் பணி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை வனப்பகுதி,மன்னவனூர் செல்லும் சாலையின் இருபுறங்கள், கூக்கால் வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 9 வது நாளாக காட்டு தீ கட்டுகடங்காமல் தொடர்ந்து எரிந்து வருகிறது, இந்த தீயை அணைக்க திண்டுக்கல் வனக்கோட்டம்,கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வன களப்பணியாளர்கள், சிறப்பு வன மீட்பு குழு,வனக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்,
மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியூர் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வாகனங்கள் மற்றும் வருண் தண்ணீர் பீரங்கி 8 வாகனங்கள் வரவளைக்கப்பட்டு தீயை அணைக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் போராடி வருகின்றனர், இதனையடுத்து மண்டல வனப்பாதுகாவலர் காஞ்சனா இது குறித்து தெரிவிக்கும் போது 80 சதவிகிதம் தீயை அணைத்து இருப்பதாகவும்,2 நாட்களுக்குள் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் என்றும்,2 நாட்கள் கடந்து காட்டு தீ தொடர்ந்தால் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க பரிந்துரை செய்து இருப்பதால் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்,
மேலும் பூம்பாறை,மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் தீ எரிந்து இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த தீயினால் வனவிலங்குகள் உயிரிழக்கவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளனர், இந்த காட்டு தீயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில், வருவாய் துறை,நகராட்சி துறை,ஊராட்சி ஒன்றியம், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மேலும் மலைக்கிராமங்களில் காட்டு தீ தொடர்வதால் இப்பகுதி முழுவதுமாக புகைமண்டலமாக காட்சியளிக்கிறது, இதனால் அச்சதுடன் மலைக்கிராம மக்கள்,பூம்பாறை,மன்னவனூர், கூக்கால் மலைச்சாலைகளை கடந்து வருகின்றனர்.