குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் 100 கிலோ மலர்கள் கொண்டு வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பழனி தண்டாயுதபாணி கோவில் கட்டுப்பாட்டில் அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவில் இயங்கி வருகிறது, மேலும் இந்த குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவில் சுற்றுலாதலங்களின் பட்டியலில் உள்ளதால் தினந்தோறும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் முருகனை தரிசனம் செய்து வருவது வழக்கம், இந்நிலையில் கொடைக்கானல் கோடை இன்டர்நேஷனல் நட்சத்திர விடுதி சார்பாக மலர் வழிபாடு நடத்துவது வாடிக்கை.
இதனை தொடர்ந்து குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலில் சுமார் 100கிலோ மல்லிகை,செவ்வந்தி, அரளி,ரோஜா,முல்லை உள்ளிட்ட பூக்கள் கொண்டு ஓம்,முருகன் உள்ளிட்ட வடிவம் அமைக்கப்பட்டது, மேலும் பூக்களால் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டிருந்ததை கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர், இதனை தொடர்ந்து குறிஞ்சி ஆண்டவர் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும் மலர் வழிபாடும் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தங்க கவசத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார், இந்த மலர் வழிபாட்டில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு குறிஞ்சி ஆண்டவர் முருகனை சாமி தரிசனம் செய்தனர்.