கொல்லிமலை பழங்குடி இன மக்கள் நாமக்கலில் ஆர்ப்பாட்டம்

கொல்லிமலையில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்கக் கோரி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஆதிவாசிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கம், தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், கொல்லிமலை பழங்குடி மக்களுக்கு, வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்கக்கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க தலைவர் தங்கராஜ் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்

. தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் குணசேகரன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இது குறித்து, பழங்குடியினர் முன்னேற்ற சங்க தலைவர் தங்கராஜ் கூறியதாவது: தமிழகத்தில் பழங்குடி மக்களை அதிகமாக கொண்ட, இரண்டாவது பெரிய மாவட்டம் நாமக்கல். இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.

நாங்கள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றோம். கொல்லிமலை குண்டூர் நாட்டில், பழங்குடி மக்கள் பட்டா நிலங்களில், 6,000 ஏக்கருக்கு மேல், தனியார் நிறுவனங்கள் போலி பத்திரம் பதிவு செய்துள்ளனர். அவற்றை ரத்து செய்யக்கோரி மனு அளித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்யும் நிலங்களுக்கு, பட்டா வழங்க கோரி மனு கொடுத்தும் பயன் இல்லை.

குறைந்த பட்சம், பழங்குடி மக்களுக்கு விதிவிலக்கு அளிக்க கூட மாநில அரசுக்கு, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வில்லை. வன உரிமை சட்டம் 2006ல் நிறைவேற்றப்பட்டு, 17 ஆண்டுகள் முடிந்தும், கொல்லிமலையில் ஒரு சிலருக்கு மட்டும் பட்டா வழங்கி விட்டு, 900 மனுக்களை காணவில்லை என்று கூறி மனுவை ரத்து செய்துவிட்டனர். தொடர்ந்து, 500 மனுக்கள் கொடுத்தோம். அவற்றையும் கிடப்பில் போட்டுள்ளனர். அதனால், மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story