சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் துவக்கம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிரவலூா் ஊராட்சியில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் முகாமினை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக இன்று முதல் 21 நாள்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. தடுப்பூசியை போடுவதன் மூலம் கால்நடைகளை கால், வாய் காணை (கோமாரி) நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும், இந்தத் தடுப்பூசியால் கறவை மாடுகள் பால் உற்பத்தி, எருதுகளின் வேலைத் திறன், கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு போன்றவைகள் தடங்கலின்றி நடைபெறும். விடுபட்ட மாட்டினங்களுக்கு அடுத்த மாதம் ஜூலை 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படும். பிரவலூா் கிராமத்தில் 300 மாட்டினங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்தத் தடுப்பூசி மூலம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள மொத்தம் 2,11,300 மாடுகள் பயன்பெறுகின்றன.
இதற்கான தடுப்பூசிகள், மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் இதற்கான தகுந்த உபகரணங்களில் குளிரூட்டப்பட்ட நிலையில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கென நியமிக்கப்பட்ட 70 குழுக்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரில் சென்று தடுப்பூசியை செலுத்துகின்றன. தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாமில் பங்கேற்று அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசியை செலுத்தி அவற்றை கோமாரி நோயிலிருந்து பாதுகாக்கலாம் என தெரிவித்துள்ளார்