இரசாயன கழிவில் உயர் வகையான நெல் ரகங்கள் விளைகிறது : விவசாய சங்க தலைவர் பேட்டி

தென்பெண்ணை ஆற்றின் இரசாயன கழிவு நீரில் உயர் வகையான நெல் ரகங்கள் விளைவதாக விவசாய சங்கத் தலைவர் ராம கவுண்டர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை சங்க துவக்க விழா மற்றும் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராம கவுண்டர் கலந்து கொண்டு புதிய கிளை சங்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம கவுண்டர், கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தோல் தொழிற்சாலைகளோ ரசாயன சாயப்பட்டரைகளோ கிடையாது. அங்கு வாழும் பொதுமக்கள் துணிகளை துவைக்கும்போது உருவாகும் கழிவுகள் ஆற்றில் கலந்து தென்பண்ணையாற்றில் கழிவுநீர் அதிக அளவில் செல்கிறது. இந்த நீரில் சல்பர் அதிக அளவில் உள்ளதால் நுரைகள் பொங்கி வருகிறது. சல்பர் சத்துகள் அதிகம் உள்ள இந்த நீரின் மூலம் விவசாயம் செய்வதால் சன்ன ரக நெல் வகைகள் அதிக அளவில் விளைகிறது.

அதைப்போல இந்த கழிவு நீரின் மூலம் அதிக அளவில் மீன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இதன்மூலம் 600 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் கழிவு நீர் மூலம் மூலம் நெல் விவசாயம், மாடு வளர்ப்பு, தென்னை மரங்கள், மாமரங்கள் மற்றும் கீரைகள், பூக்கள் உள்ளிட்ட பல வகையான விவசாயம் நடைபெறுகிறது. இதனால் விவசாயிகளுக்கு தென்பெண்ணை ஆற்று நீர் தேவையான ஒன்றாகி வருகிறது. காவிரி தண்ணீரில் நெல் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. ஆனால் தென்பெண்ணை ஆற்று நீரில் பல வகையான பயிர்கள் விளைகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

Tags

Next Story