வெளிநாட்டில் வேலையில் சேர்ப்பதாக கூறி கிருஷ்ணகிரி பெண் ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக பரபரப்பு

வெளிநாட்டில் வேலையில் சேர்ப்பதாக கூறி கிருஷ்ணகிரி பெண் ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக பரபரப்பு

உறவினர்கள் புகார் மனு 

வெளிநாட்டில் வேலையில் சேர்ப்பதாக கூறி கிருஷ்ணகிரி பெண் ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்ணை மீட்டுத்தரக்கோரி போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் உறவினர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர் மகேந்திரன். இவர், தன்னுடைய உறவினர்களுடன் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- என்னுடைய சகோதரி மகேஸ்வரி (வயது 42). அவரை மலேசியாவில் வேலை உள்ளதாகவும், அங்கு சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் திருப்பத்தூரை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் கூறினார். அதை நம்பிய என்னுடைய சகோதரி, கடந்த மாதம் 4-ந் தேதி ஏஜெண்டுகள் மூலம் சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு சென்றார். அவரை நான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, புரோக்கர்கள் தன்னை வேறு சிலரிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக கூறி கதறி அழுதார். சட்டவிரோதமாக ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும் கூறினார். அதன்பிறகு என்னுடைய சகோதரியை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது சகோதரி தொடர்ந்து மலேசியாவில் இருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, என்னுடைய சகோதரியை மீட்டுத்தர வேண்டும். மேலும் அவரை மலேசியாவுக்கு வேலைக்கு அழைத்து சென்று விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி ரூ.1 லட்சத்துக்கு பெண் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story