ஊரெங்கும் மரம் வளர்க்கும் ஊராட்சி தலைவிக்கு பாராட்டு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, எலவனூர் ஊராட்சி மன்ற தலைவியாக பணியாற்றி வருபவர் இந்துமதி. கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு,தனது ஊராட்சி மிகவும் வறட்சியான பகுதியாக இருப்பதை உணர்ந்து, வளமிக்க பகுதியாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டார். இதற்காக, தனது ஊராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் இருமருங்கிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்தார்.
மேலும், கால்நடைகள் மரக்கன்றுகளை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக பாதுகாப்பு அம்சங்களையும் மேற்கொண்டார். அவ்வாறு நட்டு வைத்த மரக்கன்றுகளுக்கு பணியாட்களை நியமித்து நாள்தோறும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தார். நட்டு வைத்த மரங்கள் எல்லாம்,நல்ல வளர்ச்சி அடைந்ததை பார்த்த ஊராட்சி மன்ற தலைவி இந்துமதி, பிறகு இதை தீவிர செயலாக மாற்றினார். இதற்கு அவரது கணவர் பாலுவும் உறுதுணையாக இருந்தார். தற்போது, இந்த எலவனூர் ஊராட்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு நாள்தோறும் டேங்கரில் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றும் அளவுக்கு மாறிவிட்டது. இதனால் ஊரெங்கும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என மரங்கள் காட்சி தருகிறது. அதே சமயம் குளிர்ச்சியாகவும் உள்ளது. இந்த பகுதியில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் பங்கேற்க வந்த அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, இந்த காட்சிகளை கண்டு, ஊராட்சி மன்ற தலைவி இந்து மதியை மனதாரப் பாராட்டினார்.