ஆதார் சேவை மையத்தில் காத்திருக்கும் மாணவர்கள், பொதுமக்கள்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், அடுத்த வகுப்புக்கு செல்லும் மாணாக்கர்கள், வேறு பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், மேற்படிப்புக்கு செல்பவர்கள் என பல தரப்பினர் விலாசம், மொபைல் எண் உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்திட, வங்கி கணக்கு துவங்க, என பல பணிகள் செய்திட ஆதார் அவசியம் தேவையாக உள்ளது. இதனை சரி செய்ய, பழைய தாலுக்கா அலுவலகம் சென்றால், அங்கு ஒரு கணினி பணியாளர் மட்டுமே உள்ளார்.
ஒருவர் விடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் காத்திருத்தல், அல்லது மறுநாள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால், பலரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க அந்தந்த பள்ளிகளில் ஆதார் சேவை மையம் துவங்கி, மாணவ, மாணவியர்களுக்கு உதவிட வேண்டும் என பெற்றோர், மாணாக்கர்கள் மற்றும் மக்கள் நீதி மைய மகளிரணி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய தாலுக்கா அலுவலகம், பிப். 27ல் தமிழக முதல்வரால் திறக்கப்பட்டு, தற்போது அனைத்து துறைகளும், புதிய அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆதார் சேவை மையம் இன்னும் பழைய அலுவலகத்தில் உள்ளது. புதிய தாலுக்கா அலுவலகத்தில், ஆதார் சேவை மையம்,இ சேவை மையம் அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.