பேராவூரணி : குமரப்பா பிறந்த நாள் விழா மற்றும் கண்காட்சி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஜே.சி.குமரப்பாவின் 132வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து, காந்தியப் பொருளாதார மேதை குமரப்பாவின் 132 ஆவது பிறந்த நாளில், அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பள்ளி அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி வரவேற்றார். பாரத ஸ்டேட் வங்கி பேராவூரணி கிளையின் முதன்மை மேலாளர் ராமமூர்த்தி, பட்டுக்கோட்டை லாரல் சிபிஎஸ்இ பள்ளியின் செயலாளர் ஜீவிகா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஜே.சி.கே சிபிஎஸ்இ வித்யாலயா பள்ளியின் லெவல் அப்-24 கல்வி அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, இளம் அறிவியல் துறை ஆய்வாளர்களை உருவாக்கும் விதமாக மாணவர்களின் நேரடி செய்முறை பயிற்சி, சுய கற்பனை வளம், உருவாக்கும் திறன், பிரச்னைகளை எதிர் கொள்ளுதல், ஆய்வின் முடிவுகளை வகைப்படுத்துதல், வரைபட மாதிரிகள் மூலம் விளக்குதல் என பலவகையான அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இதில், குமரப்பா பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஆசிரியர் சுபா நன்றி கூறினார்.