குமரி : வீடு புகுந்து திருடிய தம்பதி உட்பட 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உட்கோட்ட காவல்நிலையங்களில் சமீப காலமாக வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் யாங்சன் டோமா பூட்டியா மேற்பார்வையில் கோட்டார் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் ஒழுகினசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது சந்தேகப்படும் வகையில் இரும்பு கம்பி மற்றும் கதவு உடைக்கும் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த தவசிபால்(எ) ஏசேக்கியேல் (37) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் இவர் கோட்டார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி மற்றும் சுசீந்திரம் ஆகிய காவல்நிலையங்களில் 9 இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது.
மேலும் கிடுக்குபிடி விசாரணையில் இவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த திருட்டு சம்பவங்களில் சம்மந்தப்பட்ட செண்பகராஜ் (35) மற்றும் அவரது மனைவி திருப்பதி (31) சம்மந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களை திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி சென்று கைது செய்து திருடு போன சுமார் 12½ லட்சம் மதிப்புள்ள 305 கிராம் தங்க நகைகள் மற்றும் சுமார் 1¼ லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. தொடர் திருட்டு வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வழக்கு சொத்துகளை மீட்ட கோட்டார் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் மகேஷ்வரராஜ், மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டினார்.