குமரி : அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் நேதாஜி நகரை சேர்ந்தவர் குமார தாஸ் (47). இவர் திங்கள் சந்தை பேரூராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டார். தற்போது அங்கு பணிபுரிகிறார். குமாரதாஸ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் இருந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் குமாரதாஸ் மற்றும் அவர்கள் மனைவி சுதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக இவர்கள் 85 லட்சத்து 34 ஆயிரம் சொத்து சேர்த்து இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், நேற்று காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹெக்டேர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் ஜான் பெஞ்சமின் தலைமையிலான போலீசார் குமாரதாஸ் வீட்டிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். வீடுகள் மற்றும் சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் சில ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தெரிகிறது. காலை தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது.