குமரி :பாதிரியார், திமுக நிர்வாகி உட்பட 3 பேருக்கு குண்டாஸ்
கைது செய்யப்பட்டவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள மயிலோடு கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் அலுவலகத்தில் கடந்த 20 ஆம் தேதி அந்த சர்ச்சில் பங்கு பேரவை உறுப்பினராக இருந்த சேவியர் குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
சேவியர் குமார் அரசு போக்குவரத்து கழக பணியாளராகவும், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி தலைவராகவும் இருந்தார். இந்த கொலை வழக்கில் தக்கலை ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர் ரமேஷ் பாபு, ஆலய பங்கு பணியாளர் ராபின்சன் 34) உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஆலய பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டஸ் ரோக் 58) வின்சென்ட் (60) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதை அடுத்து தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படையினர் தேடி வந்த நிலையில் இரண்டாவது குற்றவாளியான ஆலய பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கின் முதல் எதிரியாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தர். இதையடுத்து போலீஸ் தரப்பில் ராவின்சன், ரமேஷ் பாபு ஆகியோரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன் மற்றும் ஜஸ்டிஸ் ரோக் ஆகிய மூன்று பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆட்சியர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.
கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மூன்று பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இன்று அடைக்கப்பட்டனர்.