குமரி : பருவமழை குறித்து கலந்தாய்வு கூட்டம்
கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் மலையடிவாரம், தாழ்வான பகுதிகள், ஆற்றுப்படுகைகள், கடலோர பகுதி, வாய்கால்கள், நீரேற்று பகுதிகள், அணை பகுதிகளின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்கள், வயல் நிலங்கள், கால்நடைகள் உள்ளிட்டவைகளை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து முதலுதவிகள் உள்ளிட்டவைகள் அளித்திடும் வகையில் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி, வருவாய்த் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுசுகாதாரத்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, மின்சாரவாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட குளங்களின் நீர் அளவிளை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குளங்களில் 80% நீரினை மட்டுமே தேக்கிவைக்க வேண்டும். என கூறினார். நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்,ஆர்டிஓக்கள் காளீஸ்வரி, தமிழரசி, காவல் கண்காணிப்பாளர் சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.