மும்பை சிறையில் இருந்த குமரி மீனவர்கள் விடுவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கீழமணகுடியை சேர்ந்த சகாய ஆண்டனி, ஆரோக்கிய புரத்தை சேர்ந்த விஜய், ராமநாதபுரம் மாவட்டம் நிடிஷோ ஆகியோர் ஜனவரி மாதம் 28ஆம் தேதி குவைத்தில் இருந்து படகு மூலம் கடல் வழியாக இந்தியா வந்தனர். மும்பை எல்லைக்குள் பிப்ரவரி 6ஆம் தேதி புகுந்ததும், மும்பை கடலோர போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களை மீட்டு தர கோரி விஜய் வசந்த் எம் பி - டம் உறவினர்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் மும்பையில் உள்ள வக்கீல் மூலமாக அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுபட்டது. நேற்று ஜாமீன் மூலம் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மூன்று பேரையும் விஜய் வசந்த் எம் பி திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் அழைத்து வந்தார்.
பின்னர் விஜய் வசந்த் எம் பி கூறுகையில், - 3 பேர்களும் குவைத்தில் இருந்து சித்திரவதையை அனுபவித்து தப்பித்து வந்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் அபராத செலவு, உணவு அனைத்து செலவுகளை ஏற்றுக் கொண்டோம். தற்போது நீதிமன்றம் நேற்று அவர்களை விடுவித்தது. பத்திரமாக அவர்களை மீட்டு வந்து குடும்பத்துடன் ஒப்படைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். என்று கூறினார்.