மகாராஷ்டிராவில் கரை சேர்ந்த குமரி மீனவர்கள்

மகாராஷ்டிராவில் கரை சேர்ந்த குமரி மீனவர்கள்
பைல் படம்
ஆழ்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் மகாராஷ்டிர மாநிலம் ஜெய்காட் கடற்கரையை அடைந்ததாக கடலோர காவல் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிராங்கிளின் உட்பட அதே பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இவர்களது படகு இயந்திரம் பழுதாகி கடலுக்குள் தத்தளிப்பதை பிப்ரவரி 25ஆம் தேதி அவ்வழியே சென்ற கப்பலில் இருந்தவர்கள் கண்டு இவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உறவினர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், அரசுத்துறைக்கும் ஆழ்கடலில் தத்தளிக்கும் மீனவர்களையும் படகினையும் மீட்க கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள கடலோர காவல் படையினர் குமரி மாவட்டத்தை சேர்ந்த சர்வதேச மீன் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனிக்கு அனுப்பி உள்ள தகவலில், - கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரும் மிகுந்த பாதுகாப்பாக உள்ளதாகவும், பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்காட் கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து மீனவர்கள் நேற்று இரவு மகாராஷ்டிரா வந்து சேர்ந்தனர்.

Tags

Next Story