நெருக்கடியை மீறி போட்டியிடும் குமரி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர்?

நெருக்கடியை மீறி போட்டியிடும் குமரி பாராளுமன்ற  அதிமுக வேட்பாளர்?

பசிலியான் நசரேத்

நெருக்கடியை மீறி போட்டியிடும் குமரி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக நாகர்கோவில் கீழராமன்புதூரை சேர்ந்த பசிலியான் நசரேத் அறிவிக்கப்பட்டுள்ளார். 68 வயதான இவர் மீனவ முக்குவர் சமூகத்தை சேர்ந்தவர். துபாய் மற்றும் வெளி நாடுகளில் தொழிலதிபராக உள்ளார். திமுக மீனவர் அணி அமைப்பாளராக பணியாற்றி வந்தார். அங்கு தனக்கு போதிய அங்கீகாரம் வழங்கவில்லை என்பதால் அதிருப்தியில் கடந்த நவம்பர் மாதம் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுக மாநில மீனவர் அணி இணை செயலாளராக நியமிக்கப்ப்டடார். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் பசிலியான் போட்டியிடுவதாகவும் அறிவிப்பு வெளியானது.

ஆர்.சி. மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் மீனவர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் இவருக்கு கணிசமாக கிடைக்க வாய்ப் பிருப்பதாகவும், இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகளுக்கான வாக்குகள் சிதறக்கூடும் என்பதால் மக்களவை தொகுதி தேர்தல் போட்டி யிலிருந்து விலகிக் கொள்ளுமாறும் இவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்பட்டது. இதனால் பசிலியான் நசரேத்துக்கு பதில் அதிமுக-வில் வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில் தற்போது பசிலியான் நசரேத் கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பேரவையின் உறுப்பினர், கோட்டாறு மறைமாவட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு உறுப்பினர், குமரி மாவட்ட முக்குவர் மீனவர் சங்கத்தின் பொருளாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார். குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஒருவரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது கடற்கரை பகுதி வாக்குகள் என்பது குறிப்பிட தகுந்ததாகும். இந்த நிலையில் கடற்கரை பகுதி வாக்குகள் மற்றும் கட்சி வாக்குகளை குறிவைத்து பசிலியன் களமிறக்கப் பட்டுள்ளார்.

Tags

Next Story